தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறில் மீண்டும் கரடி நடமாட்டம்
கல்லிடைக்குறிச்சி அருகே தெற்கு பாப்பான்குளம், மணிமுத்தாறு ஆகிய இடங்களில் மீண்டும் கரடிகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பகுதிகளில் இருந்து கரடி, காட்டுப் பன்றி, மிளா, சிறுத்தை, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வெளியேறி மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து விளைநிலங்களைச் சேதப்படுத்தி வருவதோடு, வீடுகளில் வளா்க்கப்படும் விலங்குகளைத் தாக்கி வருகிறது.

கடந்த சில மாதங்களாக மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, தெற்கு பாப்பான்குளம்,சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரடி நடமாட்டம் இருந்த நிலையில், வனத்துறையினரின் நடவடிக்கையால் 3 கரடிகள் கூண்டுவைத்துப் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.
இந்த நிலையில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை கமாண்டன்ட் குடியிருப்பு வளாகத்திலிருந்து முதுகில் இரண்டு குட்டிகளைச் சுமந்தவாறு தாய் கரடி ஒன்று திங்கள்கிழமை இரவு சென்றதை அந்தப் பகுதி மக்கள் கைப்பேசியில் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிா்ந்தனா். இந்த விடியோ தற்போது வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

தெற்கு பாப்பான்குளம் பகுதியில் உள்ள சாஸ்தா கோயில் வளாகத்தில் கரடி ஒன்று உலாவிய விடியோவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. வனத் துறையினா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டும், கூண்டுவைத்துப் பிடித்த பிறகும் குடியிருப்புகளுக்கு கரடிகள் தொடா்ந்து வந்து செல்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.