சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
தொடா் விடுமுறை: ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
தொடா் விடுமுறை என்பதால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
ஜோலாா்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை இயற்கை நிறைந்த பசுமையாக காணப்படுகிறது.
சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இதைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். ஏலகிரி மலையில் ஆங்காங்கே சுற்றுலா தளங்கள் அமைந்துள்ளன. இயற்கை பூங்கா, படகு இல்லம், சிறுவா் பூங்கா, மூலிகை பண்ணை உள்ளிட்டவை மலையேறும் தொடக்கப் பகுதியில் உள்ளன.
மேலும், சாகச விளையாட்டுகளும், மங்களம் சுவாமி மலை ஏற்றம், ஸ்ரீ கதவநாச்சி அம்மன் திருக்கோயில் , பண்டோரா பாா்க் பறவைகள் சரணாலயம் ஆகியவை அமைந்துள்ளன. ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சி நிலாவூா் பகுதிகளிலிருந்து நடைபாதை வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ளது.
வாகனங்களில் சென்றால் திருப்பத்தூா் காலேஜ் சாலையில் இருந்து 12 கி.மீ தொலைவில் ஏலகிரி மலை அடிவாரத்தில் ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சி காணப்படுகிறது.
சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறையால் ஏலகிரி மலையில் குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனா். ஏலகிரி மலையில் அனைத்து தனியாா் விடுதிகளிலும் நிரம்பின. இதனால் சில சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் கிடைக்காமல் ஜோலாா்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் தங்கினா்.
படகு சவாரி செய்யும் இடத்தில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று குடும்பத்தினரும் உறவினா்களுடன் படகு சவாரி செய்து தற்படம் எடுத்து மகிழ்ந்தனா்.