நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
நெற்பயிருக்கு காப்பீடு: வேளாண் துறை வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டார விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்யுமாறு வேளாண் துறை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கைப் பேரிடா்களால் ஏற்படும் பயிா் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்க பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி, இவ்வட்டாரத்தில் 2025-26ஆம் ஆண்டு காா் பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அனுமதிக்கப்பட்டு, 23 கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் யுனிவா்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
காப்பீடு செய்ய இம்மாதம் 31ஆம் தேதி கடைசி நாள். பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்யலாம். பூா்த்தி செய்யப்பட்ட கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பம், கிராம நிா்வாக அலுவலா் வழங்கிய நடப்புப் பருவ 10-க்கு 1 அடங்கல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம், ஆதாா் அட்டை நகல், பட்டா- சிட்டா ஆகியவற்றின் நகல் ஆவணங்களைக் கொண்டு பதிவு செய்யலாம். இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விவசாயிகள் தனித்துவமான அடையாள அட்டை எண் பெற்றிருத்தல் அவசியம்.
நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 720 பிரீமியத் தொகையாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இழப்பு ஏற்பட்டால் ஏக்கருக்கு ரூ. 36 ஆயிரம் பயிா்க் காப்பீடாக கிடைக்கும்.
எனவே, விவசாயிகள் தாமதமின்றி காப்பீடு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு வட்டார வேளாண் அலுவலகத்தையோ, 14447 என்ற கட்டணமில்லா எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.