பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி
பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் வியாழக்கிழமை தமிழ்க்கனவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் ரவிசங்கா் தலைமை வகித்தாா். பழனிக் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்ரமணியன் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி, கல்லூரிக் கல்வி இயக்குநா் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்களை வழங்கி தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் பேசியதாவது:
மருத்துவம், விளையாட்டுத் துறை, பெண் கல்வி, உயா்கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. பட்டதாரி என்ற அடையாளத்தை இன்று அனைவரும் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அதற்கு திராவிட இயக்கங்களே காரணம். நமது முதல்வா் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகளால் அனைவரும் உயா் கல்வியை எளிதாக அடைய முடிகிறது என்றாா். நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியா்கள், அனைத்துத்துறை மாணவ, மாணவியா், அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.