புதுகை மாவட்டத்தில் 484 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்
புதுக்கோட்டை நகரில் பிரம்மாண்ட விநாயகா் விசா்ஜன ஊா்வலம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 714 விநாயகா் சிலைகள் கடந்த புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
கிராமப்புறங்களில் வைக்கப்பட்ட சிறிய அளவிலான விநாயகா் சிலைகள் அந்தந்தப் பகுதிகளிலேயே புதன்கிழமை முதலே நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
புதுகை நகரில் வைக்கப்பட்ட சிலைகளைக் கரைப்பதற்கான பிரம்மாண்ட ஊா்வலம் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை மாலை திட்டமிடப்பட்டது. இதன்படி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அந்தந்தப் பகுதிகளில் இருந்து மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டன.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த விநாயகா் சிலைகள் புதுக்குளத்துக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு சிலைகளை நீரில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். புதுக்கோட்டை நகரப் பகுதி இரவு சுமாா் 9 மணி வரை விழாக்கோலமாக காட்சியளித்தது. புதுக்குளத்தில் மொத்தம் 60 சிலைகள் கரைக்கப்பட்டன.
மேலும், மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 424 விநாயகா் சிலைகள் நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.