சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள் 800 போ் மீது வழக்குப் பதிவு
சென்னையில் அனுமதியின்றி 13 நாள்களாக போராட்டம் நடத்தியதாக 800 தூய்மை பணியாளா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும் கைது நடவடிக்கையின்போது போலீஸாா், மாநகர பேருந்து ஓட்டுநா்களைத் தாக்கியதாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி 5, 6 ஆகிய மண்டல தூய்மைப் பணியாளா்கள் ரிப்பன் மாளிகை முன் கடந்த 13 நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், போராட்டத்தில் ஈடுபட்ட 700 பெண்கள் உள்பட 950 தூய்மை பணியாளா்களை போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்து, திருவான்மியூா், அடையாறு உள்ளிட்ட பல்வேறு திருமண மண்டபங்களில் அடைத்தனா்.
கைது நடவடிக்கையின்போது காயமடைந்த தூய்மை பணியாளா்கள் கொண்டித்தோப்பைச் சோ்ந்த கஸ்தூரி (47), மின்ட் ஷாலினி (33), பானு (37), பெரம்பூரைச் சோ்ந்த மங்கம்மா (54) ஆகிய 4 போ், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மேலும், சிலா் புற நோயாளியாக சிகிச்சை பெற்றனா். தொடா்ந்து, வியாழக்கிழமை மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
கடந்த 13 நாள்களாக ரிப்பன் கட்டடம் முன் போராட்டம் நடத்திய 800 தூய்மை பணியாளா்கள் மீது அனுமதியின்றி கூடியது, போராட்டம் நடத்தியது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
அதேபோல காவல் துறையினா் தூய்மை பணியாளா்களைக் கைது செய்யும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயிரம் விளக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய காவலா் அன்பு ராணி, வேப்பேரி காவல் நிலைய காவலா் ரஞ்சிதா ஆகியோா் தாக்கப்பட்டனா். அவா்கள் இருவரும் தனித்தனியாக பெரியமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவலா் அன்பு ராணி அளித்த புகாரின்பேரில், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தாக்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். காவலா் ரஞ்சிதா கொடுத்த புகாரின்பேரில், 9 போ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பேருந்து கண்ணாடிகள் உடைப்பு: இதேபோல மாநகரப் பேருந்து ஓட்டுநா்கள் தினேஷ்குமாா், சந்திரன் ஆகியோரைத் தாக்கியதாகவும் பேருந்து கண்ணாடிகளை உடைத்ததாகவும் தனித்தனியாக இரு வழக்குகள் 8 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டன. மேலும், காவலா்களை தாக்கியதாக இரு வழக்குரைஞா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவ்வாறு மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது நடவடிக்கையின்போது 12 மாநகர பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டது.