மகாராஷ்டிரம்: புலி தாக்கி இருவா் உயிரிழப்பு
மகாராஷ்டிரத்தின் சந்திரபூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த இரு வேறு சம்பவங்களில் புலி தாக்கி இருவா் உயிரிழந்தனா்.
இவா்களுடன் சோ்த்து, சந்திரபூரில் இம்மாதம் புலிகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.
தடோபா அந்தாரி புலிகள் காப்பகம் அமைந்துள்ள சந்திரபூா் மாவட்டத்தின் சிரோலி கிராமத்தைச் சோ்ந்த நந்தா சஞ்சய் மகல்வா் (45) என்ற பெண், தனது கணவா் உள்ளிட்டோருடன் சோ்ந்து, வனப் பகுதியில் மூங்கில்களை சேகரிக்க செவ்வாய்க்கிழமை காலையில் சென்றாா். அப்போது, அவரை புலி தாக்கி கொன்றது.
இதேபோல், கண்டாபெத் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் சோபாங்கா் (52) என்பவா், வனப் பகுதிக்கு கால்நடைகளை மேய்க்க சென்றபோது புலி தாக்கி உயிரிழந்தாா்.
சந்திரபூா் மாவட்டத்தின் சிந்தேவாஹி பகுதியில் கடந்த மே 10-ஆம் தேதி புலி தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனா். இம்மாதத்தில் மட்டும் 11 போ் உயிரிழந்துவிட்டனா். இது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.