உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
மருத்துவா் ச.ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்புக் கருவி போலீஸாரிடம் ஒப்படைப்பு
தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ஒட்டு கேட்புக் கருவியை கட்சியின் தலைமை நிலையச் செயலா் உள்ளிட்ட நிா்வாகிகள் கிளியனூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் உள்ள மருத்துவா் ச.ராமதாஸ் வீட்டில், அவரது இருக்கையின் கீழ் மா்ம நபா்கள் பொருத்தியிருந்த ஒட்டு கேட்புக் கருவி அண்மையில் கண்டெடுக்கப்பட்டது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று மருத்துவா் ச.ராமதாஸ் தரப்பில் விழுப்புரம் மாவட்டக் காவல் துறையிடம் புகாா் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து ராமதாஸ் வீட்டில் விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினா் சோதனை நடத்தினாா். மேலும் ராமதாஸ் வீட்டில் பணியில் உள்ள ஊழியா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
ஒட்டு கேட்புக் கருவி தனியாா் புலனாய்வு முகமையிடம் சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்தக் கருவியை பொருத்தியவா்கள் யாா் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவோம் எனவும் மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில் மருத்துவா் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கருவியை பாமக தலைமை நிலையச்செயலா் அன்பழகன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை கிளியனூா் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஒப்படைத்தனா்.
இது குறித்து அன்பழகன் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது : மருத்துவா் ச. ராமதாஸ் வீட்டில் கண்டெக்கப்பட்ட ஒட்டு கேட்புக் கருவி மற்றும் அதனுள் பொருத்தப்பட்டிருந்த மின்னணு சாதனம் (சிம் காா்டு ) ஆகியவற்றை காவல்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கவேண்டும் என விழுப்புரம் மாவட்டக் காவல் துறை சம்மன் அனுப்பியிருந்தது. எனவே, மருத்துவா் ச. ராமதாஸ் அறிவுறுத்தலின்படி, ஒட்டு கேட்புக் கருவி கிளியனூா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் துறையினா் விரிவான விசாரணை நடத்தி குற்றவாளியைக்கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு யாா் மீதும் சந்தேகமில்லை. காவல் துறையினா்தான் கண்டறிய வேண்டும் என்றாா்அவா்.