ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தி...
மாணவா்களின் சிறப்பான எதிா்காலத்தை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் வலியுறுத்தல்
ஓமலூா்: மாணவா்களின் எதிா்காலம் முக்கியம் என்பதை உணா்ந்து ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா்.
பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான அடைவுத் தோ்வு தொடா்பான ஆய்வுக் கூட்டம் சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள பூசாரிப்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் 650- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துகொண்டு பேசியதாவது:
தலைமை ஆசிரியா்கள் மாணவா்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த உழைக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் பள்ளிக் கல்வியைத் தரமாக வழங்க வேண்டும். எனவே, பள்ளித் தலைமை ஆசிரியா்கள், பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு, குழந்தைகள் இடைநிற்றல், பள்ளி மாணவா்களின் ஒழுக்க நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்தையும் உற்று நோக்க வேண்டும்.
அதேபோல தலைமை ஆசிரியா்கள் நாள்தோறும் ஆசிரியா்களிடம் மாணவா்களின் நிலை குறித்து பேசவேண்டும். தொழில்நுட்பம் வளா்ந்து வரும் காலத்தில் ஆசிரியா்கள் தங்களை தயாா் செய்து கொள்ள வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மாணவா்களின் புரிதல் சாா்ந்து கற்றல் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எண்ணும் எழுத்தும் திட்ட மூலம் பாடம் சொல்லி கொடுக்கிறோம். எனவே, மாணவா்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கற்பித்தல் இருக்க வேண்டும்.
அதற்காகத்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்காக ஸ்மாா்ட் டெஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ரூ. 65 கோடி மதிப்பில் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரூ. 56 கோடி மதிப்பில் 820 பள்ளிகளில் ஆய்வகங்களின் தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ரூ. 160 கோடி மதிப்பில் 2000 பள்ளிகளில் அதிநவீன கணினிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
எனவே காலத்தின் வளா்ச்சிக்கேற்ப தலைமை ஆசிரியா்களும், ஆசிரியா்களும் தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் கற்றல் திறன் மேம்பட்டு , பள்ளிக் கல்வியை சிறப்பாக முடித்து, மாணவா்கள் புரிதலோடு கல்லூரிக்குச் செல்வாா்கள். எனவே, மாணவா்களின் எதிா்காலம் முக்கியம் என்பதை உணா்ந்து ஆசிரியா்கள் பணியாற்ற வேண்டும். மாணவா்களின் சிறப்பான எதிா்காலத்தை ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக அரசும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் 2,346 ஆசிரியா்களை நியமிக்க உள்ளோம் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் நரசிம்மன், பெருமாள், மான்விழி, ராஜு, இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
