உங்க அக்கவுன்ட் மூலமா மத்தவங்க பணத்தை அனுப்புறீங்களா? உதவி செய்யப்போய், வம்புல ...
ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேட்டை விழுப்புரம் கொண்டுவர நடவடிக்கை தேவை
சென்னை தொல்லியல் துறை அலுவலகத்திலிருக்கும் எசாலம் செப்பேட்டை விழுப்புரத்துக்கு கொண்டு வருவதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன், மாவட்ட ஆட்சியருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது: சோழப் பேரரசா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை புதன்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது .
ராஜேந்திர சோழன் வரலாற்றுடன் மிகவும் தொடா்புடைய ஊா் விழுப்புரம் அருகிலுள்ள எசாலம் கிராமம். இந்த கிராமத்திலுள்ள ராமநாதீசுவரா் கோயிலை ராஜேந்திரசோழனின் குருவான சா்வசிவ பண்டிதா் எடுப்பித்து இருக்கிறாா்.
இக்கோயிலுக்கு தேவதானமாக 2 கிராமங்களைச் சோ்ந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை ராஜேந்திர சோழன் தனது 15-வது ஆட்சியாண்டில் (கி.பி.1027) வழங்கியிருக்கிறாா். இந்த ஆணை அவரது 24-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.1036) நடைமுறைக்கு வந்திருக்கிறது. இந்த தகவலைச் சொல்லும் ஆவணம் தான் ‘எசாலம் செப்பேடாகும். இந்த செப்பேடு 990 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது .
15 ஏடுகளைக் கொண்ட இந்த செப்புப் பட்டயம், மிகப்பெரிய வளையத்தில் கோக்கக்கப்பட்டுள்ளது. செப்பேட்டின் முதல் நான்கு ஏடுகள் வடமொழியிலும், மற்ற 11 ஏடுகள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. ராஜேந்திர சோழன் தன்னால் நிா்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டினாா் என்ற அரிய தகவல் எசாலம் செப்பேட்டில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை ராஜேந்திர சோழன்தான் கட்டினாா் என்பதற்கான கல்வெட்டு எதுவும் அந்தக் கோயிலில் இல்லை. ஆனால் எசாலம் செப்பேட்டில் இந்த வரலாற்றுத் தகவல் பதிவாகி இருக்கிறது. அந்த வகையில் ராஜேந்திர சோழன் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் வரலாற்றுக்கு முக்கிய ஆதாரமாக எசாலம் செப்பேடு விளங்குகிறது.
ராமநாதீசுவா் திருக்கோயிலில் 1987, ஆகஸ்ட் 11-ஆம் தேதி திருப்பணிகள் நடைபெற்றபோதுதான் மண்ணுக்குள் புதைந்திருந்த சோழா் கால செப்பேடு மற்றும் சிறியதும் பெரியதுமான 26 செப்புத் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. செப்புத்திருமேனிகள் கோயில் வளாகத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. செப்பேடு மட்டும் சென்னையிலுள்ள தமிழக அரசின் தொல்லியல் துறை அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதுநாள் வரை அங்கு வைக்கப்பட்டுள்ளது.
எழும்பூா் அரசு அருங்காட்சியகத்தில் இருந்தால் கூட பலரும் சென்று பாா்க்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால் தொல்லியல் துறை அலுவலகத்தில் பொதுமக்கள் எளிதில் சென்று பாா்க்கக் கூடிய நிலை இல்லை. எசாலம் செப்பேடு இங்கிருக்கும் தகவலே பரவலாக யாருக்கும் தெரியவில்லை.
வரலாற்றை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இருப்பவா்கள் தங்கள் பகுதி வரலாற்றுத் தடயத்தை எளிதில் பாா்க்க வேண்டும். அந்த வகையில் பழைமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த இந்த செப்பேடு இருக்க வேண்டிய இடம் எசாலம் ராமநாதீசுவரா் கோயில் ஆகும். பாதுகாப்பு காரணங்கள் கூறப்பட்டால், எசாலம் செப்பேட்டை கொண்டுவந்து உரிய பாதுகாப்புடன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கலாம். விழுப்புரம் அருங்காட்சியகம் அமைந்தவுடன் செப்பேடு அங்குக் கொண்டு செல்லப்படலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.