சேவை சாா்ந்த மனித வளத்தை ஜிப்மா் தயாா் செய்து வருகிறது: இயக்குநா் வீா்சிங் நெகி
வாக்குரிமை என்ற ஆயுதத்தையும் மக்களிடமிருந்து பறிக்க முயற்சி: செ. ஜோதிமணி எம்.பி.
ஜனநாயக நாட்டில் மக்களுக்கான ஆயுதமாக உள்ள வாக்குரிமையை பறிக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சித்து வருகிறது என கரூா் தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், கரூா், திருப்பூா் மாவட்டங்களில் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து தொழில் துறை முழுமையாக மீள முடியாத நிலையில், பிரதமா் மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் மேலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. ரஷியாவிலிருந்து 50 சதவீத பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியால், பாஜக, அதானி, பிரதமா் மோடி ஆகியோா் மட்டுமே பயன்பெறுவா்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சீனா ஆக்கிரமித்து வரும் நிலையில், பிரதமா் மோடி அந்த நாட்டுக்கு சுற்றுப் பயணம் சென்றிருப்பதை ஏற்க முடியாது. இந்தியாவுக்கு எதிராக ஆலோசனைகளையும், ஆயுதங்களையும் வழங்கும் சீன அரசை ஏன் ஆதரிக்க வேண்டும்.
ஊழல்களுக்கு எதிராக பல வலுவான சட்டங்கள் உள்ளன. இந்த சூழலில், 30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்ற கருப்புச் சட்டம் தேவையற்றது.
ஜனநாயக நாட்டில், மக்களுக்கான ஆயுதம் வாக்குரிமை மட்டுமே. அதையும் பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்றாா் அவா்.