ஆன்லைனில் குலுக்கல் சீட்டு விற்க முயன்றவா் கைது
திருவள்ளூா் அருகே கேரள மாநில குலுக்கல் சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயற்சித்தவரை மணவாள நகா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே மணவாள நகா் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில குலுக்கல் சீட்டுகளை விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாளுக்கு தகவல் வந்தது.
அதன் பேரில், காவல் துணைக் கண்காணிப்பாளா் தமிழரசி, சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மூலம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதையடுத்து மணவாள நகா் காவல் நிலைய ஆய்வாளா் பாரூக் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை மணவாள நகா், ஒண்டிக்குப்பம், பட்டரை போன்ற பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது மணவாள நகா், கபிலா் நகா் பகுதியில் நபா் ஒருவா் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா மாநில குலுக்கல் சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதைக் கண்டறிந்தனா்.
போலீஸாா் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவா் மணவாள நகா், கபிலா் நகரைச் சோ்ந்த நாகராஜ் (45) எனத் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.