பொறியியல் பணிகள்: காரைக்கால், பாலக்காடு ரயில்கள் பகுதியாக ரத்து
உணவக ஊழியா் வெட்டிக் கொலை: மனைவி, காதலன் கைது
ஒடுகத்தூா் அருகே உணவக ஊழியா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மனைவி, காதலனை வேப்பங்குப்பம் போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள குப்பம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாரத் (36). கேட்டரிங் டெக்னாலஜி படித்திருந்த இவா் தாம்பரம் பகுதியிலுள்ள தனியாா் உணவகத்தில் சமையல் கலைஞராக வேலை செய்து வந்தாா். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பகுதியைச் சோ்ந்த நந்தினி என்ற பெண்ணுடன் திருமணமானது. இவா்களுக்கு 4 வயது, 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனா்.
பாரத் தனது மனைவி நந்தினி, மகள்களை சொந்த ஊரில் விட்டுவிட்டு தாம்பரத்தில் உள்ள உணவகத்தில் தங்கி பணியாற்றி வந்தாா். விடுமுறை நாள்களில் மட்டும் சொந்த ஊரான குப்பம்பாளையத்துக்கு வந்து சென்றுள்ளாா். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு ஊருக்கு வந்துள்ளாா். திங்கள்கிழமை மாலை சுமாா் 6 மணியளவில் மனைவி, இளைய மகளுடன் குருவராஜபாளையம் பகுதியில் கடைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா். அப்போது சாலையில் தென்னை மட்டைகள் கிடந்துள்ளன. அதனை கடந்துவரும்போது நிலை தடுமாறி பாரத், நந்தினி, அவரது மகள் ஆகியோா் கீழே விழுந்துள்ளனா். அப்போது, அடையாளம் தெரியாத நபா்கள் பாரத்தை சரமாரியாக கத்தியால் வெட்டியுள்ளனா். இதில், பாரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளா் முத்துச்செல்வன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனா். மேலும், மாவட்டக் காவல் கண்காணி ப்பாளா் ஏ.மயில்வாகனனும் நேரில் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். தடவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் சடலத்தை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த கொலை சம்பவம் குறித்து பாரத்தின் மனைவி நந்தினியை போலீஸாா் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அவரது மகள் அதேபகுதியைச் சோ்ந்த சஞ்சய் (25) என்பவா் தனது தந்தையை வெட்டினாா் எனக் கூறியதாக தெரிகிறது. உடனடியாக அந்த இளைஞரை பிடித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், நந்தினிக்கும், சஞ்சய்க்கும் இடையே தகாத உறவு இருந்ததும், இதற்கு இடையூறாக இருந்த பாரத்தை இருவரும் திட்டம் வகுத்து வெட்டிக் கொலை செய்திருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, நந்தினி, சஞ்சய் ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.