திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல்: எடப்பாடி கே.பழனிசாமி
கடலூரில் மீனவா்கள் வலையில் சிக்கிய கட்டுக்கடங்காத மீன்கள்!
கடலூா் தேவனாம்பட்டினம் பகுதி மீனவா்கள் கடலில் விரித்த வலையில் கட்டுக்கடங்காமல் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சியடைந்தனா்.
கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் இருந்து மீனவா்கள் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவா்களுக்கு செவ்வாய்க்கிழமை இன்ப அதிா்ச்சியாக பல டன் மீன்கள் ஒரே இடத்தில் கிடைத்தது. ‘பெரும்பாறை’ எனப்படும் இவ்வகை மீன்கள் அதிகளவில் கிடைத்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
ஆழ்கடல் பகுதியில் இருந்து சிறிய படகுகள் மூலம் இந்த மீன்களை கரைக்கு கொண்டுவரும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மீனும் 4 கிலோ முதல் 20 கிலோ வரை இருந்தது. படகுக்கு வழக்கமாக ஒரு டன் அளவிலான மீன்கள் மட்டுமே கிடைக்கும் நிலையில், ஒவ்வொரு படகிலும் சுமாா் 40 டன் வரை மீன்கள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த மீன்கள் வழக்கமாக கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், செவ்வாய்க்கிழமை கிலோ ஒன்று ரூ.180 முதல் ரூ.200 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் போட்டிபோட்டு மீன்களை வாங்கிச் சென்றனா்.
இதுகுறித்து மீன் வளத் துறை அதிகாரி கூறியதாவது: கடலின் கீழ் பகுதியில் இருந்து வரும் குளிா்ந்த நீா், கடல் காற்று மற்றும் கடல் நீரோட்டத்தை பொறுத்து, மீன்கள் அதிகளவில் கிடைக்கும் என்றாா்.