திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசன கட்டணத்தை ரூ.100-ஆக உயா்த்த முடிவு -...
`சரக்கு டிராக்டரில் ADGP சபரிமலை பயணம்' - கோர்ட் கண்டனம்; `டிரைவர் பலிகடா' - கேரளாவில் சர்ச்சை
சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலுக்கு பம்பாவில் இருந்து பக்தர்கள் நடந்து செல்வது வழக்கம். நடக்க இயலாத பக்தர்கள் டோலி மூலம் பயணிப்பது வழக்கம். அதற்காக நிர்ணயிக்கப்பட்ட தொகையை தொழிலாளர்களுக்கு பக்தர்கள் வழங்க வேண்டும்.
சுவாமி ஐயப்பன் சாலை மார்கமாக பம்பாவில் இருந்து சன்னிதானத்துக்கு உணவு பொருள்கள் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படுகிறது. அந்த டிராக்டர்களில் முன்பு பலரும் பயணம் செய்து வந்தனர்.

மலைப்பாதையில் டிராக்டரில் பயணிப்பது ஆபத்தானது என்பதால், சரக்கு கொண்டு செல்லும் டிராக்டர்களில் டிரைவர் மட்டுமே செல்ல வேண்டும் எனவும். டிரைவரைத் தவிர கூடுதலாக யாரும் டிராக்டரில் பயணிக்கக்கூடாது எனவும். மீறி டிராக்டரில் பயணித்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 2021-ம் ஆண்டு கேரளா ஐகோர்ட்டின் தேவசம் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கிடையே டிராக்டரில் போலீஸ் ஏ.டி.ஜி.பி ஒருவர் சபரிமலை சன்னிதானத்துக்கு சென்றுவந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபரிமலை சன்னிதானத்தில் நவகிரக சன்னதி பிரதிஷ்டைக்காக கடந்த 12-ம் தேதி மற்றும் 13-ம் தேதி நடை திறக்கப்பட்டு இருந்தது. 12-ம் தேதி மாலை ஏ.டி.ஜி.பி எம்.ஆர்.அஜித்குமார் பம்பா கணபதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு சுவாமி ஐயப்பன் சாலை வழியாக சிறிது தூரம் நடந்து சென்றதாகவும். கேமராக்கள் உள்ள பகுதியை தாண்டியதும் சன்னிதானத்திற்கு போலீசுக்கு தேவையான பொருள்கள் எடுத்துச் செல்லும் டிராக்டரில் பயணம் செய்து சபரிமலை சென்றதாகவும், பின்னர் 13-ம் தேதி மதியம் சபரிமலையில் இருந்து பாம்பாவுக்கு டிராக்டரில் பயணம் செய்ததாகவும் சபரிமலை ஸ்பெஷல் கமிஷனர் ஐகோர்ட்டில் ரிப்போர்ட் அளித்தார்.
ஏ.டி.ஜி.பி-யுடன் பர்சனல் செக்யூரிட்டி ஆப்பீசர் ஒருவரும் இருந்ததாகவும் அந்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்திய கேரளா ஐகோர்ட் தேவசம்போர்டு பெஞ்ச் போலீஸ் ஏ.டி.ஜி.பி-யை கடுமையாக விமர்சித்திருந்தது. ஏ.டி.ஜி.பி-யின் டிராக்டர் பயணம் துர்பாக்கியமானது எனவும். ஏ.டி.ஜி.பி-க்கு உடல்நிலை சரியில்லை என்றால் ஆம்புலன்ஸில் சென்று இருக்கலாமே எனவும் கோர்ட் கேள்வி எழுப்பியது.
கோர்ட் விமர்சித்ததை அடுத்து எதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் துறை முடிவு செய்தது. அதன்படி ஏ.டி.ஜி.பி-யை விட்டுவிட்டு, அவரை அழைத்துச் சென்ற டிராக்டர் டிரைவர் மீது பம்பா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அலட்சியமாக செயல்பட்டதாகவும், கோர்ட் உத்தரவை மீறி டிராக்டரில் ஆள்களை அழைத்துச் சென்றதாகவும் டிரைவர் மீதான முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏ.டி.ஜி.பி-யை காப்பாற்ற டிராக்டர் டிரைவரை பலிகடா ஆக்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.