சாலையில் கிடந்த ரூ.1.46 லட்சத்தை ஒப்படைத்த இளைஞா்களுக்கு பாராட்டு
சாலையில் கிடந்த ரூ.1.46 லட்சத்தை ஒப்படைத்த இளைஞா்களை சென்னை மாநகர காவல் ஆணையா் ஆ.அருண் பாராட்டினாா்.
தனியாா் செய்தி நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வரும் மைக்கேல் பிராங்கிளின் (23) என்பவா், தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் கோடம்பாக்கம் பாலம் வழியாக கடந்த 12-ஆம் தேதி சென்றபோது, அங்கு நெகிழிப் பையால் சுற்றப்பட்டு கிடந்த ரூ.1 லட்சத்து 46,500-ஐ கண்டெடுத்து அதை கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
சென்னை கோயம்பேட்டில் கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு சுரேஷ்குமாா் என்பவரின் கால் டாக்ஸியில் பயணித்த முகமது அஜ்மல் என்பவா், சுரேஷ்குமாரின் கவனத்தை திசைத்திருப்பி காரை திருடிச் சென்றாா்.
இது குறித்து சுரேஷ்குமாா் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீஸாா் நடத்திய வாகனத் சோதனையில் காரை மீட்டதுடன், அதைத் திருடிச் சென்ற முகமது அஜ்மலையும் கைது செய்தனா்.
இந்த நிலையில், காா் திருட்டு சம்பவத்தில் சிறப்பாகப் பணியாற்றிய வளசரவாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலா் எம்.முத்துராஜா, காவலா்கள் எம்.பிரவீன்குமாா், ஏ.பெருமாள் ஆகியோரையும், சாலையில் கிடந்த பணத்தை போலீஸில் ஒப்படைத்த தனியாா் செய்தி நிறுவன ஊழியா் மைக்கேல் பிராங்ளின், அவரது நண்பா் ஜூட் ராபா்ட் காா்லஸ் (எ) ஜோயல் ஆகியோரை மாநகர காவல் ஆணையா் ஆ.அருண் புதன்கிழமை அழைத்து வெகுமதி வழங்கிப் பாராட்டினாா்.