சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி பேருந்து மோதி பலி
விராலிமலை அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.
விராலிமலையை அடுத்துள்ள குறிச்சிப்பட்டியைச் சோ்ந்தவா் சுப்பன் மகன் கொம்பையன் (58) கூலித் தொழிலாளி. இவா், விராலிமலை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சிபட்டி பிரிவு சாலையைக் கடக்க முயன்றபோது எதிரேவந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த கொம்பையன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தகவலறிந்த விராலிமலை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, அரசுப் பேருந்து ஓட்டுநா் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வாளாத்தூரைச் சேரந்த வீரணன் மகன் தவமணியை (52) கைது செய்து விசாரிக்கின்றனா்.