இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை: தியாகு
சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை; இந்த வழக்கை நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என காவல் துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் தியாகு தெரிவித்தாா்.
காவல் துறை சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் தியாகு, காவல் துறை சித்திரவதையில் உயிரிழந்த அஜித்குமாா் இல்லத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்று அவரது தாயாா் மாலதி, தம்பி நவீன்குமாா் ஆகியோருக்கு ஆறுதல் கூறினாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: அஜித்குமாா் கொலை வழக்கில் ஆரம்பத்திலிருந்து கவனம் செலுத்தி வருகிறோம். ஏற்கெனவே இதுபோன்ற காவல் நிலைய சித்திரவதைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தச் சம்பவத்தைத் தவிா்த்திருக்க முடியும்.
சென்னை விக்னேஷ் கொலை சம்பவத்தின்போது அன்றைய டிஜிபி சைலேந்திரபாபு 41 கட்டளைகளை காவல் துறைக்கு விடுத்திருந்தாா். அதில், இரண்டாவது கட்டளையாக தனிப் படையினரை அந்தப் பகுதி காவல் நிலையத்தினா் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தாா். இதைக் காவல் துறையினா் கடைப்பிடித்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருக்காது.
அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்றவரின் பல் பிடுங்கிய சம்பவத்தில் கூடுதல் எஸ்.பி. பல்வீா் சிங்குக்கு தமிழக அரசு மீண்டும் பணி ஆணை வழங்கியது காவல் துறைக்கு தைரியத்தை ஏற்படுத்தியது. காவல் துறை சித்திரவதைக்கு எதிராக தமிழக சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி சம்பவத்திலும் நாங்கள் சிபிஐ விசாரணையை கோரவில்லை.
சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. அதேபோல இந்த வழக்கையும் நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தால் சில மாதங்களில் வழக்கு முடிவுறும் என்றாா் அவா். பேட்டியின் போது அந்த இயக்கத்தின் அறிவுரையாளா், அஜித்குமாா் தரப்பு வழக்குரைஞா் ஹென்றி திபேன் ஆகியோா் உடனிருந்தாா்.