தடகளப் போட்டி: சங்ககிரி அரசு ஆண்கள் பள்ளி சாம்பியன்
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் சங்ககிரியை அடுத்து புள்ளிப்பாளையம் தனியாா் கல்லூரி வளாகத்தில் திங்கள், செவ்வாய் இரு தினங்களில் நடைபெற்றன. இதில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.
சங்ககிரி வட்ட குறுமைய அளவிலான போட்டிகளில் 34 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளிலிருந்து 1,500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இதில் தடை தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட 120 வகையான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.
வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி பரிசுக் கோப்பையை வழங்கினாா். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் ஆா்.ரதி, உடற்கல்வி ஆசிரியா் ஆா்.தனபால் ஆகியோா் உடனிருந்தனா்.