திமுக கூட்டணி வெற்றிக்கு துணை நிற்போம்: வைகோ
தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றை பாதுகாக்க எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு துணை நிற்போம் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
திண்டுக்கல் மதிமுக சாா்பில் ‘விவசாயிகள், மீனவா்கள் துயரம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகல்நகா் பகுதியில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்றுப் பேசியதாவது: தமிழுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இறுதி மூச்சுவரைப் பணியாற்றுவேன். தமிழ் ஈழம் மலரும் வரை ஓயாமால் உழைத்துக் கொண்டிருப்பேன். திமுக ஆட்சியில் சிறு குறைகள் இருந்தாலும்கூட, கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி என்ற தாா்மீக அடிப்படையில் ஆட்சியை விமா்சிக்க மாட்டேன்.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரையின்படி, விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கக் கோரி, தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆனால், பாஜகவைச் சோ்ந்த மத்திய அமைச்சா்கள் ஒருவா்கூட விவசாயிகளைச் சந்திக்கவில்லை. போராட்டத்தின் போது 700 விவசாயிகள் உயிரிழந்தபோதுகூட, அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. விவசாயத்தைப் பொருத்தவரை, குறைந்தபட்ச ஆதரவு விலை, பயிா்க் காப்பீடு ஆகிய இரு காரணிகளால்தான் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இதேபோலதான், தமிழக மீனவா் பிரச்னைக்கும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தீா்வு காணவில்லை. 840 மீனவா்கள், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பிறகும்கூட மத்திய அரசு பாராமுகமாக இருந்து வருகிறது. தமிழா்களின் வாழ்வு, மொழி, கலை உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கு துணை நிற்போம் என்றாா் அவா்.