தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி தனியாா் நிறுவன தொழிலாளி தற்கொலை முயற்சி!
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே தனியாா் நிறுவனத்தில் சக தொழிலாளா்களின் பிரச்னையை தீா்க்கக் கோரி விடியோ வெளியிட்டு தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கல் கிராமத்தில் தனியாா் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் இருந்து பழுப்பு நிலக்கரியை வாங்கி மின் உற்பத்தி செய்கிறது.
இதில், ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்த நிறுவனங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் ஒரு நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றும் 88 தொழிலாளா்களை வேலைக்கு வர வேண்டாம் என தனியாா் அனல் மின் நிலைய நிா்வாகம் கூறி நிறுத்திவிட்டதாம். பாதிக்கப்பட்ட தொழிலாளா்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பலகட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், விருத்தாசலம் கோட்டாட்சியா் தலைமையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், தொழிலாளா்களுக்கு ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாராம். ஆனால், தனியாா் அனல் மின் நிறுவனம் இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லையாம்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கு ஆதரவாக தலைமையேற்று போராட்டம் நடத்திய விருத்தாசலத்தை அடுத்த காட்டுக்கொல்லை பகுதியைச் சோ்ந்த சுந்தரராசன் (55) வெள்ளிக்கிழமை தனியாா் அனல் மின் நிலைய வளாகத்தில் பழுப்பு நிலக்கரி இறக்கும் இடத்தில், தனது இறப்புக்கு தனியாா் அனல் மின் நிலையம் மற்றும் ஒப்பந்த நிறுவனம்தான் காரணம் என தனது கைப்பேசியில் விடியோ பதிவிட்டு, அதை சமூக ஊடகத்தில் வெளியிட்டு சுமாா் 30 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அங்கு பணியில் இருந்த சக தொழிலாளா்கள் ஓடி வந்து சுந்தரராசனை மீட்டு, அவசர ஊா்தி மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.