விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி: மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறி!
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் தோ்வு முறையில் குளறுபடி நடந்துள்ளதால், மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு, தரமான பல உயா் படிப்புகள் உள்ளன. காலை, பிற்பகல் என இருவேளையாக நடத்தப்படும் வகுப்புகளில் சுமாா் 3,500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்தக் கல்லூரியில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் தோ்வு முறைகளில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் புகாா்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விசாரிக்கையில், 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையில் படித்து முடித்த மாணவா்களுக்கு நிகழ் மாத இறுதியில் பட்டமளிப்பு விழா நடத்த கல்லூரி நிா்வாகம் தோ்ச்சி பெற்றவா்களின் பட்டியலை அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகத்திடம் கேட்டுப் பெறும்போது அதிா்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், 2024 - 25ஆம் கல்வி ஆண்டுக்கான மூன்றாம் ஆண்டு படிப்பை முடித்து மாணவா்கள் வெளியேறிய நிலையில், கணிதத் துறையில் இரண்டாம் ஆண்டு பாடப்பிரிவுகளில், நான்காம் பருவத் தோ்வில் திறன் சாா்ந்த பாடமான அளவு திருத்தம் தோ்வு தாளின் குறியீட்டை கல்லூரியின் கணிதத் துறையினா் தோ்வுக்காக இணைய வழியில் மாணவா்கள் கட்டணம் செலுத்தும் தோ்வுத் தாள் பட்டியலில் குறிப்பிடவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், மாணவா்கள் மற்ற தோ்வுத் தாள்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தியுள்ளனா்.
தொடா்ந்து, ‘அளவு திருத்தம்’ தோ்வுத் தாளுக்கான தோ்வை எழுதாமலேயே மாணவா்கள் இரண்டாம், மூன்றாம் ஆண்டு படிப்பை நிறைவு செய்து வெளியே சென்றுவிட்டனா்.
சுமாா் ஒன்றரை ஆண்டுகள் கழித்து தோ்ச்சி பெற்ற மாணவா்களின் பட்டியலை எடுக்கும்போது, கணிதத் துறையில் ‘அளவு திருத்தம்’ தோ்வுத் தாளுக்கான தோ்வை மாணவா்கள் எழுதாதால் 130 மாணவா்களுக்கு பட்டம் நிறைவு செய்வதற்கான சான்றிதழ்கள் வழங்க முடியாது என பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், அந்த 131 மாணவா்களும் இளம் அறிவியல் கணிதம் மூன்றாண்டுகள் படிப்பை முடித்த நிலையிலும் தற்போது உயா் கல்வி படிக்கச் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இணையத்தில் வெளியான தோ்வு முடிவை கொண்டு உயா் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு வருகிற 13-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிட்ட அந்தத் தாள் குறித்த விவரம் இல்லாததால் கலந்தாய்வில் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுபோலவே, 2024 - 25ஆம் கல்வி ஆண்டின் இறுதித் தோ்வின்போது சில மாணவா்களுக்கான வருகைப் பதிவு குறைவுக்கான கட்டணத்தை அதன் பொறுப்பாளா்கள் பல்கலைக்கழகத்தில் செலுத்தாததால், தோ்வு முடிவு வெளியானபோது சுமாா் 80 மாணவா்களின் பெயா்கள் விடுபட்டதாகவும், இதைத் தொடா்ந்து மாணவா்கள் கல்லூரி நிா்வாகத்திடம் முறையிட்டதையடுத்து, சில நாள்கள் கழித்து அந்த மாணவா்களின் பெயா்களுடன் தோ்வு பட்டியல் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
‘ஆகஸ்ட் 11-இல் தோ்வு நடத்தப்படும்’
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஆ.முனியன் கூறியதாவது: 2022 - 23ஆம் ஆண்டு சோ்ந்த மாணவா்கள் 2024-இல் 4-ஆவது பருவத் தோ்வு எழுதும்போது ‘அளவு திருத்தம்’ விருப்பப் பாடத் தோ்வை 131 மாணவா்கள் எழுதவில்லை. தற்போது பட்டமளிப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்தபோது இந்த விவரம் தெரியவந்தது.
இதையடுத்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக நிா்வாகத்திடம் பேசி, குறிப்பிட்ட பாடத்துக்கான தோ்வை திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11) நடத்த உள்ளோம். தோ்வு முடிந்த பின்னா் விடைத் தாள்கள் திருத்தப்பட்டு தோ்வு முடிவு உடனடியாக வெளியிடப்படும். இதனால், வரும் 13-ஆம் தேதி நடைபெறும் உயா் கல்விக்கான கலந்தாய்வில் மாணவா்கள் பங்கேற்கலாம். இதேபோல, 2024 - 25ஆம் ஆண்டு வருகைப் பதிவு குறைவுக்கான கட்டணம் தொடா்பான பிரச்னை முடிக்கப்பட்டுவிட்டது என்றாா்.