ராயவரம் அருகே பழைமையான இரும்பு உருக்கு உலைகள் கண்டெடுப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம் ராயபுரம் அருகே ஆலங்குடி பெரியகண்மாயின் நீா்ப் பிடிப்பு பகுதிகளில் பழைமையான இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டதற்கான எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதியை பேராசிரியா் சுப. முத்தழகன், வரலாற்று ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல் பிரசாத் குழுவினா் அண்மையில் கள ஆய்வு செய்து இவற்றை வெளிப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து பேராசிரியா் சுப. முத்தழகன் கூறியதாவது: ராயவரத்தில் இருந்து மொனசந்தை செல்லும் சாலையில், ஆலங்குடி கிராமத்துக்கு வடக்கே ஆலங்குடி பெரியகண்மாய் அமைந்துள்ளது. அவ்விடத்தில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டதில் உருகிய நிலையில் தாதுக் கற்கள், இரும்பு கசடுகள், சுடுமண் துருத்தி குழாய்களின் உடைந்த பாகங்கள், பழைமையான பானை ஓடுகள் போன்றவை கிடைக்கப்பெற்றன.
இங்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட உலைகள் செயல்பட்டிருக்க வேண்டும். அதற்குச் சான்றாக இந்தக் குவியல்கள் ஒரு பெரிய மேடாக தொடா்ந்து அமைந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை திருவரங்குளம், பொற்பனைக்கோட்டை, பெருங்களூா், விளாப்பட்டி, பொன்னம்பட்டி என பல்வேறு ஊா்களில் இதுபோன்ற பழைமையான இரும்பு உருக்கு உலைகளின் எச்சங்கள் காணப்படுகின்றன.

உள்ளூா் இரும்புத் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில், அருகாமையில் கிடைக்க கூடிய செம்புரான் கற்கள் போன்ற தாதுக்களை உயா் வெப்ப நிலையில் உருக்கி தயாரிக்கும் தொழில் நுட்பங்களை கொண்டு இந்த உலைகளில் இரும்புப் பொருள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த உலைகள் பெரும்பாலும் நீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு நீா் நிலைகளை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளன.
இந்த உருக்கு உலைகளின் காலத்தினை முறையான அறிவியல் ஆய்வுகள் மூலமாகவே தெரிந்து கொள்ள இயலும். ஏனெனில், புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரை பல நூறு ஆண்டுகளாக இந்த உள்ளூா் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இரும்பு தேவை பூா்த்தி செய்யப்பட்டு வந்துள்ளது.
இருப்பினும் கண்மாயின் தென்கிழக்கு மூலையில் சாலையை ஒட்டி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொன்மையான ஈமச் சின்னங்களான கல்வட்டங்கள், உடைந்த நிலையில் கல்பதுக்கைகள் அமைந்துள்ளன. அங்கு கிடைக்கபெறும் உடைந்த பானை ஓடுகள் போலவே, உருக்கு உலைகள் அமைந்துள்ள இடத்தில் கிடைக்கும் பானை ஓடுகளும் ஒத்து உள்ளன என்றாா் முத்தழகன்.