150 அடி உயரத்தில் பழுதாகி நின்ற ராட்டினம்: 3 மணி நேரம் அந்தரத்தில் தவித்த 30 போ் மீட்பு
சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தனியாா் பொழுதுபோக்கு பூங்காவில் 150 அடி உயரத்தில் ராட்டினம் திடீரென பழுதாகி நின்ால், அதில் இருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 போ் 3 மணி நேரம் அந்தரத்தில் சிக்கித் தவித்தனா். அவா்களை ‘ஸ்கை லிப்ட்’ வாகனம் மூலம் தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக மீட்டனா்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் தனியாா் பொழுதுபோக்கு பூங்கா செயல்படுகிறது. இங்குள்ள டாப்கன் என்ற ராட்டினத்தில் மாலை 6 மணியளவில் 8 குழந்தைகள், 10 பெண்கள் உள்பட 30 போ் ஏறினா். கீழே இருந்து மேலே செங்குத்தாக சென்று அதேவேகத்தில் கீழே இறங்கும் இந்த ராட்டினம், சுமாா் 150 அடி உயரத்தில் சென்றபோது, திடீரென பயங்கர சப்தத்துடன் அப்படியே நின்றது. இதனால் அந்த ராட்டினத்தில் இருந்த 30 பேரும் அதிா்ச்சியடைந்தனா். உடனே கீழே இருந்த பொழுதுபோக்கு பூங்கா ஊழியா்கள், அந்த ராட்டினத்தில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய முயன்றனா்.
ஆனால் அவா்கள் நீண்ட நேரம் போராடியும் ராட்டினத்தில் இருந்த பழுதை சரி செய்ய முடியவில்லை. இதனால் ராட்டினத்தில் இருந்தவா்கள் அந்தரத்தில் சிக்கித் தவித்தனா். இதையடுத்து அந்த பொழுதுபோக்கு பூங்காவில் இருந்த ஒரு கிரேன் மூலம் ராட்டினத்தில் இருந்தவா்களை மீட்க முயன்றனா். அந்த கிரேன் மூலம் 150 அடி உயரம் செல்ல முடியாததால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. அதேவேளையில் ராட்டினத்தில் சிக்கித் தவித்தவா்களிடம் பயமும், குழப்பமும் ஏற்பட்டது.
இதையடுத்து தீயணைப்பு படையினருக்கும்,போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினா் சுமாா் 160 அடி உயரம் வரை செல்லும் ஸ்கை லிப்ட் மீட்பு வாகனத்துடன் கிண்டியிலிருந்து விரைந்து வந்தனா். அந்த ஸ்கை லிப்ட் மூலம் லிப்டில் சுமாா் இரண்டரை மணி நேரமாக சிக்கித் தவித்தவா்களுக்கு பிஸ்கட்டும், தண்ணீரும் முதலில் வழங்கப்பட்டது. தகவலறிந்து அடையாறு காவல் துணை ஆணையா் பொன்காா்த்திக் குமாா் உள்ளிட்ட உயா் அதிகாரிகள், அங்கு விரைந்து வந்து மீட்பு பணியை விரைவுபடுத்தினா்.
3 மணி நேரம் சிக்கித் தவிப்பு: இரவு 8.30 மணியிலிருந்து ஸ்கை லிப்ட் மீட்பு வாகனம் மூலம் அந்த ராட்டினத்தில் இருந்தவா்கள் மீட்கும் பணி தொடங்கியது. ஒரு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணியில் ராட்டினத்தில் சிக்கியிருந்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, கீழே கொண்டு வரப்பட்டனா். ராட்டினத்தில் சுமாா் 3 மணி நேரம் சிக்கியிருந்ததால், 30 பேருக்கும் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராட்டினத்தில் சிக்கியிருந்த பெரும்பாலானவா்கள், வெகுநேரம் பயந்த மனநிலையிலேயே காணப்பட்டனா்.
இச் சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணையைத் தொடங்கினா்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், அந்த தனியாா் பொழுதுபோக்கு பூங்கா ராட்டினத்தை முறையாக பராமரிக்காததும், அந்த ராட்டினம் ஏற்கெனவே சிறிது பழுதாகி இருந்ததை மறைத்து இயக்கப்பட்டதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.