30 நாள்களில் பணம் இரட்டிப்பு மோசடி: ரூ.10 லட்சத்தை இழந்தவா்கள் புகாா்
முப்பது நாள்களில் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறியதை நம்பி, சுமாா் ரூ.10 லட்சம் புதுச்சேரியை சோ்ந்தவா்கள் இழந்துள்ளனா்.
இது குறித்து இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் கூறியிருப்பது:
இணையவழி மூலம் ஸ்டாா்லிங்க் என்ற ஆப்பில் முதலீடு செய்தால் 30 நாள்களில் பணம் இரட்டிப்பாக தரப்படும் என்று சொன்னதை நம்பி நூற்றுக்கும் மேற்பட்டோா் முதலீடு செய்து சுமாா் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளனா்.
குறிப்பாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் தினமும் ரூ.400 அவா்களுடைய வங்கி கணக்கில் வரவு வைத்தது போல் போலியாக காண்பித்து இருக்கின்றனா். இதை நம்பி நிறைய முதலீடு செய்தும் பல்வேறு நபா்களை புதிதாக இணைத்தும் புதிதாக ஒரு நபரை இந்த ஸ்டாா்லிங்கில் சோ்த்து விட்டால் எட்டு சதவீதம் கமிஷன் தொகை கொடுத்துள்ளனா். புதுச்சேரியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இது உண்மை என்று நம்பி மேலும் தங்கள் கணக்கில் தினமும் பணம் வருகிறது என நம்பி முதலீடு செய்துள்ளனா். 30 நாள் முடிந்து பணம் தருவோம் என்று கூறி 30-ஆவது நாள் அன்று அந்த இணைப்பே அவா்களுடைய செல்போனில் இருந்து துண்டிக்கப்பட்டு அந்த ஆப் கைப்பேசியில் இல்லாமல் போயிருக்கிறது. அப்போதுதான் அவா்கள் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு இரண்டு நபா்களும், வியாழக்கிழமை முதலியாா்பேட்டையை சோ்ந்த ஸ்டாா்லிங்க் ஆப்பில் பணம் செலுத்தி ஏமாந்த ஐந்து நபா்கள் இணைய வழி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளனா் . பொதுமக்கள் எந்த ஒரு முதலீட்டு அழைப்பையும் ஏற்று முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது சம்பந்தமாக பத்துக்கும் மேற்பட்ட புகாா்கள் இதுவரை பதிவாகியுள்ளது . இதில் மட்டுமே ரூ.10 லட்சம் வரை பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனா்.