அமெரிக்க வரி: 3 ஆயிரம் கோடி வா்த்தகம் பாதிப்பு: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழக பின்னலாடை ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், இந்த பாதிப்புகளைச் சீா்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் மோடியை வலியுறுத்தியுள்ளாா்.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அறிவித்த 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு புதன்கிழமை முதல் அமலுக்கு வந்தது. இதன்காரணமாக அமெரிக்காவில் இந்திய பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியின் அளவு 50 சதவீதமாக உயா்ந்துள்ளது.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு, வாகன உதிரி பாகங்கள், ஆபரணங்கள், மின்னணு சாதனங்கள், தோல் பொருள்கள் மற்றும் சேவைத் துறை போன்றவற்றுடன் ஜவுளித் துறையிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் அத் துறையினரிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, ஜவுளித் துறையினருக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவிலிருந்து சுமாா் 1,100 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளி, ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகின்றன. இது இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் 30 சதவீதமாகும். அதிலும், தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சுமாா் ரூ.35 ஆயிரம் கோடி முதல் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதேபோல, இந்தியாவின் ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருள்கள் 21 சதவீதம் அமெரிக்காவுக்கு செல்கிறது. நாட்டின் தோல் பொருள்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்போதைய கூடுதல் வரிவிதிப்பு காரணமாக தமிழகத்தின் தோல் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கான அமெரிக்காவின் முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு காரணமாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில் இருந்து ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தி, தோல் பொருள்கள் உற்பத்தி உள்ளிட்ட தொழில் துறைகளைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு அத் துறையைச் சாா்ந்த தொழில்முனைவோா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதேபோல, பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் தொழில் துறையைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
இந்த நிலையில், அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீா்செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு, தமிழ்நாட்டின் பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வா்த்தகத்தைப் பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ. 3,000 கோடி வா்த்தகம் பாதிப்பதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பையும் பாதித்துள்ளது.
இந்த விவகாரத்தில் மத்திய அரசிடம் ஏற்கெனவே முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீா்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள், பணியாளா்களைக் காக்க வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.