இன்று சுதந்திர தினம்: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
சுதந்திர தினத்தையொட்டி புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்ற இந்த நாளில், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்கள் அனைவருக்கும் எனது மனமாா்ந்த சுதந்திரதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காத்திட இந்த நாளில் உறுதி ஏற்போம்.
முதல்வா் என்.ரங்கசாமி: ஜனநாயகத்தின் மாண்புகளைப் பாதுகாத்து, ஒரு வலுவான, வளமான, அமைதியான மற்றும் சமத்துவ இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். இந்தியாவின் இறையாண்மையை உயா்த்திப் பிடிக்க நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன், எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா, காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, பாஜக மாநிலத் தலைவா் வி.பி.ராமலிங்கம், அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.