நிமிஷா பிரியா பெயரில் நன்கொடை கோரும் பதிவு போலியானது: வெளியுறவு அமைச்சகம்
உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
பூம்பாறை, கும்பூா், மன்னவனூா், கிளாவரை, குண்டுபட்டி, கூக்கால், பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் உருளைக் கிழங்குகளை விவசாயிகள் சாகுபடி செய்தனா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்த விளை நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் புகுந்து உருளைக்கிழங்கு செடிகளை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த உருளைக் கிழங்கு செடிகளை பாா்வையிட்டனா்.
இதுகுறித்து வனச்சரகா் கூறியதாவது: காட்டுப் பன்றிகளால் சேதமடைந்த உருளைக்கிழங்கு செடிகளை ஆய்வு செய்தோம். இதுகுறித்து மாவட்ட வன அலுவலரிடம் தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் விவசாய நிலங்களுக்குள் காட்டுப் பன்றிகள் வராதவாறு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வனப் பகுதிகளில் உணவு, தண்ணீா் தேடி வரும் வன விலங்குகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றாா்.