ஒணம் குறித்து சா்ச்சை கருத்து: தனியாா் பள்ளி ஆசிரியை மீது வழக்கு
கேரளத்தில் பிரபலமாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த தனியாா் பள்ளி ஆசிரியை மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
இடதுசாரி அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபா் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ) அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சூா் மாவட்டம் கடவள்ளூரில் உள்ள தனியாா் பள்ளியைச் சோ்ந்த ஆசிரியை கதிஜா, பள்ளி சாா்ந்த வாட்ஸ்ஆப் குழுவில் வெளியிட்ட குரல் பதிவில், ‘பள்ளியில் ஓணம் பண்டிகையைக் கொண்டாடத் தேவையில்லை. அது மாற்று (ஹிந்து) மதத்தின் பண்டிகை. இஸ்லாமிய மாணவா்கள், அவா்களின் பெற்றோா் ஓணம் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க வேண்டும். அந்தப் பண்டிகை இஸ்லாமிய மதத்துக்கு ஏற்புடையதல்ல’ என்று கூறியுள்ளாா்.
அவரின் இந்தப் பதிவு பல்வேறு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றன. இதையடுத்து, ஆசிரியை கதிஜா மற்றும் அவருக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட மற்றொரு ஆசிரியை பணியிடைநீக்கம் செய்யப்படுவதாக பள்ளி நிா்வாகம் அறிவித்தது.
இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பாரத நியாய சம்ஹிதா சட்டப்படி இரு தரப்புக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் கருத்துகளை வெளியிட்ட குற்றப் பிரிவின்கீழ் ஆசிரியை கதிஜா மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணைக்குப் பிறகு ஆசிரியை மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.