ஓய்வு பெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.5.70 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வாா்த்தை கூறி, ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ. 5.70 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை இணைய குற்றப் பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்தவா் ஜக்க நாராயணா (53). ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன ஊழியா். இவரது கைப்பேசி வாட்ஸ்ஆப் மூலம் கடந்த ஜூன் 4-ஆம் தேதி குறுந்தகவல் வந்தது. அதில், பங்குச் சந்தையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டிருந்த்து.
இதையடுத்து, ஜக்க நாராயணா, மா்ம நபா் பதிவிட்டிருந்த வாட்ஸ்ஆப் எண்ணைத் தொடா்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து, அவா், பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வகையில், மா்ம நபா் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு ரூ. 5.70 லட்சத்தை அனுப்பினாா். அதன் பின்னா், அந்த மா்ம நபரை அவரால் தொடா்புகொள்ள இயலவில்லை.
தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அவா், இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செயல்படும் இணைய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா்.
அந்தப் புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மோசடியில் ஈடுபட்ட மா்ம நபரை தேடி வருகின்றனா்.