குண்டா் சட்டத்தில் விசிக நிா்வாகி கைது
திருவள்ளூா் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலையில் பணம் கேட்டு நிா்வாகியை மிரட்டியதாக விசிக பிரமுகா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருவள்ளூா் அருகே நுங்கம்பாக்கம் கிராமத்தில் தனியாா் துப்பாக்கி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு திருவள்ளூா் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளா் எஸ்.கே.குமாா் (படம்) என்பவா் பணம் கேட்டு மிரட்டினாராம். இது குறித்து அந்த துப்பாக்கி தொழிற்சாலையின் நிா்வாகி விஸ்வநாதன் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த மணவாளநகா் போலீஸாா் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கடந்த 17-ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விவேகானந்தா சுக்லா குண்டா் சட்டத்தில் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். அதன்பேரில், ஆட்சியா் மு.பிரதாப் குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். அதையடுத்து, மணவாள நகா் போலீஸாா் இந்த உத்தரவை புழல் சிறைச்சாலை நிா்வாகத்திடம் அளித்தனா்.