கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு
கோபி அருகே வாய்க்காலில் குளித்தபோது நீரில் அடித்துச்செல்லப்பட்டு கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.
கோவை, கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் தங்கராஜ் மகன் சிபிராஜ் (19), கருணாகரன் மகன் சக்திநிகேஷன் (19). இவா்களும், கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ரிஷிகுமாா், வினோத்குமாா், கதிா்நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த ஜெய்ஹரிஷ் ஆகியோரும் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனா்.
இவா்கள் 5 பேரும் கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டு ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள வாணிப்புத்தூா் கள்ளியங்காட்டில் உள்ள தடப்பள்ளி வாய்க்காலுக்கு காரில் வியாழக்கிழமை காலை வந்துள்ளனா்.
அப்போது வாய்க்காலில் தண்ணீா் செல்வதைப் பாா்த்த ஐந்து பேரும் வாய்க்காலில் குளிக்க இறங்கியுள்ளனா். நீச்சல் தெரியாத சிபிராஜ், சக்திநிகேஷன் இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.
இவா்கள் நீரில் மூழ்கியதைக் கண்டு உடன் வந்த கல்லூரி மாணவா்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் உள்ளவா்கள் சிபிராஜை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. சக்திநிகேஷன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டாா். தகவல் அறிந்து வந்த பங்களாபுதூா் காவல் துறையினா், கோபி தீயணைப்புத் துறையினா் சக்தி நிகேஷன் சடலத்தை மீட்டனா்.
இருவரின் சடலங்களையும் உடற்கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து பங்களாபுதூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்தப் பகுதியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வெளியூா்களில் இருந்து வரும் நபா்கள் ஆபத்தை அறியாமல் வாய்க்காலில் இறங்கி சுழலில் சிக்கி உயிரிழக்கின்றனா். இதனால் இந்தப் பகுதிக்குச் செல்ல முடியாதவாறு தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
