எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
சிரியா - சவுதி அரேபியா இடையில் ரூ. 52,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!
சிரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சுமார் ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பில், 47 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் அஹமது அல்-ஷரா தலைமையிலான இடைக்கால அரசு 7 மாதங்களுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் சூழலில், பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்த அந்நாட்டை மீண்டும் கட்டமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சிரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நிதி, தொலைத்தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய, சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.51.8 ஆயிரம் கோடி) மதிப்பீட்டில் 47 முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டின் மூலம், வீட்டு மனைகள், போரினால் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்தல், சுற்றுலா மேம்பாடு, மருத்துவமனைகள், பொழுதுபோக்குத் தலங்கள் மற்றும் 3 சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, சிரியாவின் தகவல் துறை அமைச்சர் ஹம்ஸா அல்-முஸ்தஃபா கூறுகையில், இந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 50,000 பேருக்கு நேரடியாகவும், 1,50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில், கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் வெற்றிப் பெற்று, அதிபர் அஹமது அல்-ஷரா தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது முதல், சவுதி அரேபியா அரசு சிரியாவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றது.
2017-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், போரினால் கடுமையாகப் பாதிப்படைந்த சிரியாவை மீண்டும் கட்டமைத்து உருவாக்க சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் செலவாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது அந்நாட்டை மறுசீரமைக்க சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேல் செலவாகும் என நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தாய்லாந்து - கம்போடியா சண்டைக்குக் காரணம் ஒரு ஹிந்துக் கோவிலா?