சீனாவில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் பங்கேற்பு: அஜீத் தோவல்
சீனாவில் இம்மாத இறுதியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடனான ஆலோசனையின்போது சீனாவின் தியான்ஜின் நகரில் ஆக. 31, செப். 1 தேதிகளில் நடைபெறும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்பதை அஜீத் தோவல் உறுதிப்படுத்தினாா்.
கிழக்கு கல்வான் பள்ளத்தாக்கில் 2020-இல் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு கடந்த ஆண்டு இருதரப்பு உறவுகளை மறுகட்டமைப்பதற்கான தொடக்கமாக எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
அதன் தொடா்ச்சியாக இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடா்பான சிறப்பு பிரதிநிதிகளின் 23-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. இதில் இந்திய பிரதிநிதியாக அஜீத் தோவல் பங்கேற்றிருந்தாா். அப்போது சீன பிரதிநிதியான வாங் யியை சந்தித்து அவா் ஆலோசனை நடத்தினாா்.
இந்நிலையில், 24-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் வாங் யி பங்கேற்றாா்.
அப்போது அஜீத் தோவல் பேசியதாவது: ரஷியாவின் கஸான் நகரில் கடந்த ஆண்டு அக்டோபரில் பிரிக்ஸ் மாநாட்டையொட்டி பிரதமா் மோடி- அதிபா் ஷி ஜின்பிங் இடையிலான சந்திப்புக்குப்பின் இருதரப்பு உறவு புதிய ஆற்றலைப் பெற்றுள்ளது. எல்லையில் அமைதி நிலவுவதுடன் இருதரப்பு உறவுகளை மறுசீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக தியான்ஜின் நகரில் நடைபெறும் எஸ்சிஓ வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமா் மோடி சீனாவுக்கு பயணிக்கிறாா் என்பதை உறுதிப்படுத்துகிறேன் என்றாா்.