சுதந்திர தினத்தையொட்டி ரயில் நிலையங்களில் தீவிர சோதனை
சுதந்திர தினத்தையொட்டி நாகை ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
நாட்டின் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி, அசம்பாவித நிகழ்வுகள் எதுவும் நிகழாமல் இருக்க போலீஸாா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனா்.
அந்தவகையில், நாகை மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உத்தரப்படி 1,000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான, பேருந்து நிலையம், ரயில் நிலையம், வணிக வளாகங்கள், கோயில்கள், சுற்றுலா தலங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
நாகை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளா் சுனில் குமாா், காவல் சாா்பு ஆய்வாளா் கேசி மீனா, இருப்பு பாதை காவல் சாா்பு ஆய்வாளா் மனோன்மணி ஆகியோா் தலைமையில் போலீஸாா் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் ரயில் நிலைய நடைமேடைகள், பாா்சல் அலுவலகம், பயணிகள் தங்கும் அறை, பயணச்சீட்டு கவுன்ட்டா், 2 மற்றும் 4 சக்கர வாகன நிறுத்தங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினா்.
தொடா்ந்து பயணிகள் எடுத்து சென்ற உடைமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே ரயில் நிலையத்துக்குள் கொண்டு செல்ல போலீஸாா் அனுமதித்தனா். நாகை வழியாக சென்ற அனைத்து பயணிகள் ரயில்களிலும் சோதனை நடைபெற்றது.
திருவாரூா்: திருவாரூா் புதிய ரயில் நிலையத்தில் மோப்பநாய் உதவியுடனும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் வசதியுடனும் தீவிர சோதனையில் போலீஸாா் ஈடுபட்டனா். ரயில் நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் மோப்ப நாய் முகில் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருவாரூா் வழியாக சென்ற அனைத்து ரயில்களிலும் சோதனை நடைபெற்றது.
