செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்க பயணம்: நிபந்தனைகளை மாற்றியமைத்து நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதய சிகிச்சை மேற்கொள்வதற்காக அமெரிக்கா செல்வதற்கு முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாருக்கு, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அந்த உத்தரவில் உள்ள சில நிபந்தனைகளை மாற்றியமைக்கக் கோரி, அசோக்குமாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாா் தரப்பில், அமெரிக்காவுக்கு தன்னுடன் மனைவிக்குப் பதிலாக மகள் வரவிருக்கிறாா். பயணத் தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா சென்ற பின்னா், அங்குள்ள இந்திய தூதரகத்துக்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்குப் பதிலாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அசோக்குமாா் அமெரிக்கா செல்வதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மாற்றியமைத்து உத்தரவிட்டனா்.