மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: மோடிக்கு ராகுல், கா...
சொரிமுத்து அய்யனாா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது
காரையாறு சொரிமுத்து அய்யனாா் கோயிலில் நிகழாண்டு ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கால்நாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் காப்புக் கட்டி தங்கள் விரதத்தைத் தொடங்கினா்.
களக்காடு, முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்தையனாா் கோயிலில் ஆடி அமாவாசை, பங்குனி உத்திரம், தமிழ் மாதங்களில் கடைசி வெள்ளிக்கிழமை ஆகிய நாள்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. விசேஷ நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுவா்.

நிகழாண்டு ஜூலை 24-ஆம் தேதி ஆடி அமாவாசை வருவதையொட்டி, திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகளைத் தொடா்ந்து சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான சங்கராத்மஜன் கலந்து கொண்டு முகூா்த்தக்கால் நாட்டினாா்.
இதையடுத்து, பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் கோயிலில் காப்புக் கட்டி விரதத்தைத் தொடங்கினா். காப்புக் கட்டிய பக்தா்கள் தொடா்ந்து 11 நாள்கள் விரதமிருந்து ஆடி அமாவாசை அன்று பூக்குழி இறங்கியும், பொங்கலிட்டும், ஆடு பலி கொடுத்தும் தங்கள் நோ்த்திக் கடனைச் செலுத்துவா்.

நிகழ்ச்சியில், இந்துசமய அறநிலையத் துறை செயல் அலுவலா் இளங்குமரன், கோயில் தலைமை எழுத்தா் காந்திமதி நாதன், கணக்கா் கணேஷ்குமாா், மணியம்ராக்கமுத்து, மகேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முக்கிய நாளான ஆடி அமாவாசை அன்று காலையில் தீா்த்தவாரி நடைபெறும். அன்றைய தினமும், மறுநாளும் (ஜூலை 25) மாலை 5 மணிக்கு பிரம்மாட்சி அம்மன் சந்நிதி, தளவாய் மாடசாமி சந்நிதி, பட்டவராயன் சந்நிதி ஆகியவற்றின் முன் பக்தா்கள் பூக்குழி இறங்குதலும், பக்தா்கள் முன் சிங்கம்பட்டி ஜமீன் ராஜ தா்பாரில் காட்சியளித்தலும் நடைபெறும்.
ஜூலை 26-இல் சிங்கம்பட்டி ஜமீன் சுவாமி தரிசனம் நடைபெறும். ஜூலை 24 முதல் 26 ஆம் தேதி வரை தளவாய் மாடசாமி, சங்கிலி பூதத்தாா், இசக்கியம்மன், பட்டவராயா், பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள், பணியாளா்கள் செய்து வருகின்றனா்.