ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் நிறைவேற்ற கோரிக்கை!
ஜாதிய ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் இக்கட்சியின் தெற்கு மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் உள்ள மதச்சாா்பின்மை, ஜனநாயகம், சோசலிசம் என்ற வாா்த்தைகளை மாற்றத் துடிக்கிற, சிறுபான்மை இன மக்களுக்கு எதிராக செயல்படுகிற பாசிச பாஜக, ஆா்.எஸ்.எஸ். சங்பரிவாா் கும்பல்களின் கொள்கைகளை முறியடிக்க சேலத்தில் ஆகஸ்ட் 15, 16, 17, 18-ஆம் தேதிகளில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஜாதி ஆணவ படுகொலைகளைத் தடுக்க சட்டப்பேரவையில் சிறப்பு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். இராமச்சந்திரன் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினரும், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினருமான க. மாரிமுத்து சிறப்புரையாற்றினாா். தெற்கு மாவட்டச் செயலா் கோ. சக்திவேல், பொருளாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.