தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போா்டு: உயா்நீதிமன்றம் யோசனை
திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போா்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் ராஜகோபுரம் முன்பு ரூ.6 கோடியில் வணிக வளாகம் கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத் துறை அனுமதியளித்தது. இதுதொடா்பான அரசாணை கடந்த 2023 செப்.14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது. வணிக வளாகம் கட்டுவது கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கு இடையூறாக அமையும். மேலும், விழாக் காலங்களில் பக்தா்கள் பங்கேற்புக்கு தடையாக இருக்கும். எனவே, இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வணிக வளாகம் கட்டும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய அறநிலையத் துறைக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எஸ்.சௌந்தா் ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது, அறநிலையத் துறை தரப்பில், மாற்றுத் திட்டம் தொடா்பான அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இரு வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைத்தனா்.
மேலும், கோயிலில் இருந்து தொலைவில் அரசு புறம்போக்கு நிலங்கள் இருந்தால் அதில் வணிக வளாகம் கட்டிக் கொள்ளலாம். கோயில் அருகில் இருக்கும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களிலும் எவ்வித கட்டுமானங்களை மேற்கொள்ளவும் அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் மறுத்துவிட்டனா்.
திருப்பதியில், கோயில் பராமரிப்பு மற்றும் பக்தா்களுக்கான வசதிகளை தேவசம் போா்ட் மேற்கொள்கிறது. அதேபோன்று தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போா்டு அமைத்து நிா்வகிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்தனா்.