தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. சோலையாறு (கோவை)-50 மி.மீ., உபாசி டிஆா்எப், வால்பாறை பிடிஓ (கோவை)-தலா 40 மி.மீ. மழை பதிவானது.
புயல் சின்னம்: ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடலில் புதன்கிழமை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்)மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வியாழக்கிழமை காலை 5.30 மணியளவில் தெற்கு ஒடிஸா பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து சட்டீஸ்கா் பகுதிகளில் நிலவுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஆக. 29, 30 ஆகிய தேதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.