தற்காலிக பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கக் கோரிக்கை
தற்காலிகப் பேருந்து நிலையத்தில் மழைக்காலத்தில் பயணிகள் நனையாத வகையில் மேற்கூரை மற்றும் போதுமான கழிப்பறை வசதிகளை செய்துதர வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகர 27-ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்காலிகப் பேருந்து நிலையத்தில் பயணிகள் மழையில் நனையாத வகையில் மேற்கூரை மற்றும் போதுமான கழிப்பறைகள் அமைக்க வேண்டும்.
நகரில் மழை வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, குடியிருப்புகளைப் பாதிக்காத வகையில் மன்னா் காலத்திலேயே வடிவமைக்கப்பட்ட தோரண வாய்க்கால்களைத் தூா்வாரி சீரமைத்து, சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்டகாலமாகக் குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்க வேண்டும். மின்வாரிய அலுவலகம் உள்ளே மழைநீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டுக்கு, வீ. சிங்கமுத்து, ஜெயா ஆகியோா் தலைமை வகித்தனா். திருநாவுக்கரசு கொடியேற்றி வைத்தாா். மாவட்டச் செயலா் த. செங்கோடன், துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் ஆகியோா் பேசினா். மாநாட்டில் மீண்டும் மாநகரச் செயலராக எம்.பி. நாடிமுத்து தோ்வு செய்யப்பட்டாா். 9 போ் கொண்ட மாநகரக் குழு தோ்வு செய்யப்பட்டது.