எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல்: நெல்லை மாணவா் முதலிடம்
தாய்லாந்து - கம்போடியா சண்டைக்குக் காரணம் ஒரு ஹிந்து கோவிலா?
தாய்லாந்து - கம்போடியா எல்லைப் பகுதிகளில் போர்ப்பதற்றம் உருவாகியிருக்கிறது. தாய்லாந்து ஜெட் விமானங்கள், கம்போடியா மீது குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது. இரு நாட்டுப் போருக்கு மிகப்பெரிய காரணம் ஏதேனும் இருக்குமா என்றால் அதுதான் இல்லை. ஒரு கோவில்தான் இருநாடுகளும் சண்டையிட்டுக் கொள்ள காரணமாம்.
எல்லையில் பதற்றம் நிலவி வரும் சூழலில், இருநாட்டு எல்லையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளாக தாய்லாந்து - கம்போடியா அண்டை நாடுகள். இரு நாடுகளும் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லைப் பகுதியில்தான், தாய்லாந்தின் சுரின் என்ற மாகாணமும், கம்போடியாவின் ஒட்டார் மீஞ்சே என்ற மாகாணமும் அமைந்துள்ளது.
ஆனால், தாய்லாந்து நாட்டின் சுரீன் மாகாணத்தில் உள்ள பிரசாத் தா மோன் தோம் என்ற கோவில், தங்கள் நாட்டுடைய கோவில் என்று கம்போடியா சொந்தம் கொண்டாடுவதே, அண்டை நாடுகளுக்குள் சண்டை வருவதற்குக் காரணமாக உள்ளது. இந்த கோவில் பாங்காங்கிலிருந்து 360 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே 817 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியினால், மோதல் ஏற்பட்டு அவ்வப்போது சண்டையாகவும் மாறியிருக்கிறது. கடந்த காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளால் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த கோவில் விவகாரம் அவ்வப்போது சூடுபிடித்து, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் பதற்றம் தொற்றிக் கொள்ளும். அந்த நிலையில்தான், கம்போடியா படைகள் தாய்லாந்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம்சாட்டி, கம்போடியா மீது ஜெட் விமானங்களைக் கொண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
யாருக்குத்தான் சொந்தம் இந்தக் கோவில்?
கடந்த 1863 - 1953ஆம் ஆண்டு காலத்தில் பிரெஞ்ச் காலனித்துவ ஆட்சியின்போது கம்போடியா கைப்பற்றப்பட்டிருந்தது. பிறகுதான், 1907ல் இரு தரப்புக்கும் ஒப்பந்தம் நிறைவேறியது. ஆனால், தாய்லாந்து தனது நாட்டின் வரைபடத்தை உருவாக்கியபோது, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஹிந்து கோயில், கம்போடியா எல்லைக்குள் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
இதனை, 1959ஆம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது கம்போடியா. அப்பாது, கம்போடியாவுக்கு சாதகமாகவே தீர்ப்பு வந்தது. இதனை தாய்லாந்தும் அப்போது ஏற்றுக்கொண்டது. ஆனால், அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இன்னமும் பிரச்னை உள்ளது.
2008ஆம் ஆண்டு, உலக பாரம்பரிய சின்னமாக இந்தக் கோயிலை பதிவ செய்யுமாறு கம்போடியா யுனெஸ்கோவை அணுகியது. அப்போது தாய்லாந்தில் போராட்டம் வெடித்தது. இதனால், இவ்விரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது ராணுவ தரப்பில் மோதல்கள் ஏற்படுவதுண்டு.
தற்போதும், இரு நாட்டுக்கும் இடையே சண்டை பதற்றம் உருவாகி, எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்குள்ளும் கடும் மோதல் நீடித்து வருகிறது.
தாய்லாந்து நடத்திய தாக்குதலில், கம்போடியாவில் இரண்டு பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. தாய்லாந்து ராணுவம், தங்களது ஆறு ஜெட் விமானங்களில் ஒன்றை, கம்போடியா தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாகவும், அந்நாட்டு ராணுவ இலக்குகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதையும் உறுதி செய்துள்ளது.
இந்த சண்டையைத் தொடங்கியதாக, இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக் கொள்கின்றன.
போர் பதற்றம் மற்றும் இந்த சண்டை காரணமாக, கம்போடியா -தாய்லாந்து இடையேயான எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இந்த எல்லைத் தாண்டிய தாக்குதல் காரணமாக, இரு நாட்டு எல்லைப் பகுதிகளில் வணிகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள்.
ஏற்கனவே, ரஷியா - உக்ரைன், இஸ்ரேல் - காஸா என உலகின் சில பகுதிகளில் போர் எனும் கொடிய அரக்கன் பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கோவிலைக் காரணமாக வைத்து, தாய்லாந்து - கம்போடியா சண்டைப் பதற்றம் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.