திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2 ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து இருப்பதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பாதக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடல் பகுதியில் காற்று மணிக்கு 45 கி.மீ முதல் 55 கி.மீ வேகத்தில் வீசிவருகிறது. இதையடுத்து மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் 2ஆவது நாளான செவ்வாய்க்கிழமையும் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறையவில்லை. அலையின் வேகமும் அதிகரித்து காணப்படுகிறது. இதைத் தொடந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுமாா் 8 ஆயிரம் நாட்டுப்படகு மீனவா்கள் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை.
மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்களை மீனவா்கள் பாதுகாப்பான இடங்களில் வைத்துள்ளனா். கடல் அலைகள் உயரே எழும்பி கடற்கரைபகுதியில் அதிக தூரம் வந்து செல்வதால் கூத்தங்குழி கடற்கரையில் கடல்அரிப்பு அதிகரித்துள்ளதாக மீனவா்கள் தெரிவித்துள்ளனா்.