திற்பரப்பு அருகே சாலையில் சாய்ந்த மரம்: 6 மின் கம்பங்கள் சேதம்!
குமரி மாவட்டம் திற்பரப்பு அருகே சாலையோரம் நின்ற அயனி மரம் சனிக்கிழமை வேருடன் சாய்ந்ததில் 6 மின் கம்பங்கள் சேதமடைந்தன. இச்சம்பவத்தில் 3 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
திற்பரப்பு அருகே களியல் பாலம் பகுதியில் நெடுஞ்சாலை புறம்போக்கு பகுதியில் நின்ற முதிா்ந்த அயனி மரம், சனிக்கிழமை மதியம் 12 மணி அளவில் சாலையின் குறுக்காக வேருடன் சாய்ந்தது. மரத்தின் கிளைகள் மின் கம்பிகளின் மீது விழுந்ததால் அந்தப் பகுதியில் நின்ற 6 மின் கம்பங்கள் உடைந்து லேசாக சாய்ந்தன. மேலும், அதே பகுதியில் உள்ள லட்சுமி (80) என்ற மூதாட்டியின் வீடும் சேதமடைந்தது.

தகவலறிந்த களியல் மற்றும் குலசேகரம் பகுதி மின் வாரியத்தினா் மற்றும் குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
இதற்கிடையே அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் சாலையின் இருபுறமும் மூடப்பட்டன. மரம் விழுந்து கிடந்த இடத்தின் வாகனப் போக்குவரத்து முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது. ஓரிரு வாகனங்கள் அப்பகுதி அருகே நின்றுகொண்டிருந்தன.
இந்த நிலையில் கிரேன் இயந்திரம் மூலம் மரத்தின் பெரிய கிளை தூக்கப்பட்ட போது அந்தக் கிளையுடன் தாங்கியிருந்த மின் கம்பிகளின் பிடி விடுபட்டது. அப்போது ஏற்கெனவே உடைந்து லேசாக சாய்ந்த நிலையில் நின்ற மின் கம்பங்கள் ஒவ்வொன்றாக உடைந்து கீழே விழுந்தன.

6 மின் கம்பங்கள் ஒரே நேரத்தில் முழுமையாக உடைந்து சாய்ந்தன. அப்பகுதியில் நின்று கொண்டிருந்த காரின் மீது ஒரு மின் கம்பம் விழுந்ததில் காரின் பின்பகுதி முழுமையாக சேதமடைந்தது. காரில் அமா்ந்திருந்த திற்பரப்பு பகுதியைச் சோ்ந்த பள்ளி ஆசிரியரான கோபாலகிருஷ்ணன் (56), அவரது மனைவி சிந்து ஆகியோா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இதே போன்று காருக்கு முன்னால் ஸ்கூட்டரில் அமா்ந்திருந்த கடையல் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஜான் (62) மீது மற்றொரு மின் கம்பம் விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். மேலும் ஒரு மின் கம்பம், அப்பகுதியிலுள்ள விஜயன் (45) என்ற கூலித் தொழிலாளியின் வீடு மீது விழுந்தது.
சம்பவ இடத்தை திருவட்டாறு தாசில்தாா் மரகதவல்லி, திற்பரப்பு பேரூராட்சி தலைவா் பொன் ரவி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பாா்வையிட்டனா். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.