தொடா்மழையால் நீா்வரத்து அதிகரிப்பு: திருக்குறுங்குடி கோயிலுக்கு செல்லத் தடை
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்மழையால் திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணையில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் நம்பி கோயிலுக்குச் செல்வதற்கும், தலையணையில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சில நாள்களாக பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழையால், திருக்குறுங்குடி நம்பியாறு, களக்காடு தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்குச் செல்வதற்கு செவ்வாய்க்கிழமைமுதல் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக வனச் சரகா் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.
களக்காடு தலையணை பச்சையாற்றில் குளிப்பதற்கு மறு உத்தரவு வரும்வரை சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அணையைப் பாா்வையிடத் தடையில்லை எனவும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.