நட்டாலத்தில் சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கிள்ளியூா் வட்டார சுகாதார நிலையத்துக்குள்பட்ட நட்டாலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பிடமாக நல்லூா் பேரூராட்சிக்குள்பட்ட நெய்வேலியில் செயல்பட்டு வருகிறது.
இங்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். நல்லூா் - ஐரேனிபுரம் பிராதன சாலையிலிருந்து பிரிந்து நட்டாலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அலங்கார தரை கற்கள் சாலை செல்கிறது. இந்த சாலை நீண்ட நாள்களாக குண்டு,குழிகள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. குறிப்பாக, மழைக் காலங்களில் இச்சாலை வழியே நோயாளிகள் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்துக்கு நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்ல முடியாத நிலையில், குண்டும், குழியுமாக மழை நீா் தேங்கி உள்ளது. இதனால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, நோயாளிகள்,பெ ாதுமக்கள் நலன் கருதி இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.