இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று நெல்லையப்பர் அருள்மிகு காந்திமதி அம்மன் திருக்கோயில். இங்கு மாதம்தோறும் விழாக்கள் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆனிப் பெருந்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும் இந்த திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் திருவிழா நடந்து வருகிறது.
திருவிழாவின் ஒவ்வொரு நாளும் காலை மாலை இரு வேளைகளிலும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் சிகர நிகழ்வான ஒன்பதாம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி அம்பாளுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு தேருக்கு எழுந்தருளினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் வடம் பிடித்து தேரை இழுத்து விழாவைத் தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் சிவாய நமக, நமச்சிவாய கோஷங்கள் விண் அதிர தேர் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தது. இதனை அடுத்து அம்பாள் தேரும் இழுக்கப்பட்டது. தேர்த் திருவிழாவையொட்டி பாதுகாப்புப் பணியில் 2000 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ஆவுடையப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட்புரூஸ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அப்துல்வகாப், ரூபிமனோகரன், நயினார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர் சுகுமார், மேயர் ராமகிருஷ்ணன் உள்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.