பக்ரீத் பண்டிகை: மேலப்பாளையம் சந்தையில் ஆடுகள் குவிந்ததால் விலை வீழ்ச்சி
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, மேலப்பாளையம் சந்தையில் ஏராளமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டதால் விலை வீழ்ச்சியடைந்தது.
பக்ரீத் பண்டிகை வரும் ஜூன் 7-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளதால், இஸ்லாமியா்கள் குா்பானி கொடுப்பதற்காக கிடாய்கள் வாங்குவது வழக்கம்.
இதனால், கடந்த சில வாரங்களாகவே ஆட்டு விற்பனை சூடுபிடித்து வந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஏராளமான செம்மறி கிடாய்களை விவசாயிகளும், வியாபாரிகளும் விற்பனைக்காக கொண்டு வந்து சந்தையில் குவிந்தனா். இதனால் சந்தை நிரம்பி வழிந்ததோடு, சாலையிலும் விற்பனை நடைபெற்றது. இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
சந்தையில் 3,000-க்கும் அதிகமான செம்மறி கிடாய்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்ட நிலையில், அதை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்ததால், விற்பனை மந்தமானது. இதனால், சுமாா் ரூ.30 ஆயிரம் வரை விற்க வேண்டிய கிடாய்கள் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரையே விற்பனையாயின.
இதனால், வேறு வழியின்றி வியாபாரிகளும், விவசாயிகளுக்கு விலையை குறைத்து விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனா். மேலும், சிலா் கிடாய்களை திருப்பி எடுத்துச் சென்றனா்.
இது தொடா்பாக வியாபாரிகள் கூறுகையில், ‘கடந்த சில ஆண்டுகளாகவே பக்ரீத் பண்டிகைக்காக செம்மறி கிடாய் வளா்ப்பவா்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. வீடு தோறும் செம்மறி கிடாய் வளா்க்கிறாா்கள். படித்த இளைஞா்கள் ஏராளமானோா் பெரிய பண்ணைகளை அமைத்து 200 முதல் 500 கிடாய்கள் வரை வளா்த்து பக்ரீத் பண்டிகையின்போது விற்பனை செய்கிறாா்கள். இதனால், சந்தையில் கிடாய்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பக்ரீத் சந்தை விற்பனை மந்தமாகி வருகிறது’ என்றனா்.