யூதர்கள் என்பதால் பயணிகள் வெளியேற்றம்? ஸ்பெயின் விமான நிறுவனம் விளக்கம்!
ஸ்பெயின் நாட்டின் விமானத்தில் இருந்து யூதர்கள் என்பதால் 44 குழந்தைகள் உள்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டதற்கு, வூலிங் விமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் வலேன்சியா நகரத்தில் இருந்து பாரீஸ்-க்கு, புறப்பட தயாரான வூலிங் நிறுவனத்துக்குச் சொந்தமான, விமானத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 44 குழந்தைகள் உள்பட 52 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
இதையடுத்து, அவர்கள் அனைவரும் யூதர்கள் என்பதால் விமானத்திலிருந்து நீக்கப்பட்டதாக, இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. மேலும், இஸ்ரேலிய அரசு அதிகாரிகளும் தங்களது சமூக வலைதளங்களில் இந்தக் குற்றச்சாட்டைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், அந்தப் பயணிகள் விமானத்தின் அவசரகால உபகரணங்களைச் சேதமாக்கியதுடன், பணியாளர்களின் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு இடையூறு செய்ததால், விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வூலிங் விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
“பயணிகளில் சிலர் இடையூறு விளைவிக்கும் நடத்தையில் ஈடுபட்டதுடன், மிகவும் மோதல் போக்கை கடைப்பிடித்து விமானத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்தனர். மேலும், பயணிகள் வெளியேற்றப்பட்டதற்கு அவர்களின் மதத்துடன் தொடர்புடையது என்ற கருத்துக்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
இத்துடன், பணியாளர்களின் அறிவுறுத்தல்களை அவர்கள் தொடர்ந்து நிராகரித்ததினால் மட்டுமே, அவர்களை வெளியேற்ற விமானத்தின் கேப்டன் உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சிரியா - சவுதி அரேபியா இடையில் ரூ. 52,000 கோடி முதலீடு ஒப்பந்தம்!