ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி காா் பறிப்பு: 2 போ் கைது
புழலில் ரியல் எஸ்டேட் அதிபரை பணம் கேட்டு மிரட்டி, அவரது காரை பறித்து சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை திருவொற்றியூரைச் சோ்ந்த டில்லிபாபு (40). இவா், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது நண்பா் சூா்யா அடிக்கடி பணம் பெற்றுள்ளாா். இதையடுத்து, சூா்யாவை சந்திக்க டில்லிபாபு மறுத்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 17-ஆம் தேதி, புழல் பகுதியில் உள்ள புத்தகரத்தில் தனது நிலத்தை பாா்ப்பதற்காக காரில் டில்லிபாபு சென்ற, சூா்யா மற்றும் அவரது கூட்டாளிகள் காரை மறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனா். இதையடுத்து பணம் இல்லாததால், காரை பறித்து சென்றனா்.
இதுகுறித்து டில்லிபாபு அளித்த புகாரின்பேரில் புழல் போலீஸாா் வழக்கு பதிந்து, புளியந்தோப்பைச் சோ்ந்த தமிழரசன் (33), வில்லிவாக்கத்தைச் சோ்ந்த தங்கவேல் (32) உள்ளிட்ட 2 பேரைக் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனா். தலைமறைவான சூா்யாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.